செஞ்சேரிமலை பகுதியில் பலிவாங்க காத்திருக்கும் பாலம்
செஞ்சேரிமலை பகுதியில் பலிவாங்க ஒரு பாலம் காத்திருக்கிறது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பி.ஏ.பி. பிரதான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழியாக செஞ்சேரிமலையில் இருந்து காட்டம்பட்டி, புளியம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் ஒரு பக்கம் உடைந்து உள்ளது. எதிர்புறம் உள்ள இரும்பு தடுப்பும் பலமிழந்து காட்சிப்பொருளாகதான் உள்ளது.
இதன் காரணமாக இரவு நேரத்தில் கனரக வாகனம் அல்லது 4 சக்கர வாகனம் திடீரென்று எதிர்பாராத விதமாக தடுப்பு சுவற்றை உடைத்து கொண்டு கீழே 15 அடி ஆழம் கொண்ட கால்வாய்க்குள் விழக்கூடிய நிலை நீடித்து வருகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடனே செல்லும்நிலை நீடித்து வருகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- இந்த பாலம் இருக்கும் சாலை வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பாலம் நன்றாக இருக்கிறது. ஆனால் தடுப்புச்சுவர்தான் பழுதாகி இருக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும்போது தடுப்புச்சுவர் ஆடுகிறது. யாராவது லேசாக மோதினால்கூட போதும். உடைந்து கால்வாய்க்குள் செல்ல வேண்டியதுதான்.
இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே உயிர்பலி ஏற்படுவதற்குள் பலிவாங்க காத்திருக்கும் தடுப்புச்சுவற்றை இடித்துவிட்டு அங்கு தரமான முறையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story