மசூதி ஒலிப்பெருக்கி குறித்த ராஜ்தாக்கரேவின் சர்ச்சை பேச்சால்- நவநிர்மாண் சேனாவில் இருந்து முஸ்லிம் நிர்வாகி விலகல்
மசூதி ஒலிப்பெருக்கி குறித்த ராஜ்தாக்கரேவின் விமர்சனத்தை அடுத்து நவநிர்மாண் சேனா முஸ்லிம் நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகினார்.
புனே,
மசூதி ஒலிப்பெருக்கி குறித்த ராஜ்தாக்கரேவின் விமர்சனத்தை அடுத்து நவநிர்மாண் சேனா முஸ்லிம் நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து விலகினார்.
பிரமாண்ட பொதுக்கூட்டம்
மராட்டிய புத்தாண்டான குடிபாட்வா கடந்த சனிக்கிழமை மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா மைதானத்தில் நவநிர்மாண் சேனா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, “ மசூதிகளுக்கு வெளியில் ஒலிபெருக்கிகள் எதற்கு? மதம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒலிபெருக்கிகள் இருந்தனவா? எனவே, மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள், மசூதிக்கு எதிரில் ஒலிபெருக்கிகளை வைத்து அனுமான் பாடல்களை ஒலிபரப்புவார்கள்” என கடுமையாக பேசினார்.
கட்சியில் இருந்து விலகல்
இந்த நிலையில் புனேவை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சியின் முஸ்லிம் நிர்வாகியான மஜித் சேக் என்பவர் கட்சியில் இருந்து விலகினார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ நவநிர்மாண் சேனாவில் வகுப்புவாதம் ஊடுருவிவிட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். முன்பு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி பேசுவார். ஆனால் இப்போது அவர் தனது அரசியலுக்கு சாதி மற்றும் மதத்தின் ஆதரவை தேடுகிறார்” என்றார்.
நவநிர்மாண் சேனா தலைவர் பேசிய மறுநாளே மும்பையில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் ஒலிப்பெருக்கியில் அனுமான் பாடல்களை ஒலிபரப்பி போலீசாரிடம் சிக்கி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story