புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 24 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது, தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்:
ஆக்கிரமிப்பு அகற்றம்
பள்ளிபாளையம் அருகே உள்ள எலந்தகுட்டை ஊராட்சி சின்னார்பாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்தும், விவசாயம் செய்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதையடுத்து புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்பேரில் சின்னார்பாளையத்தில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்திருந்தவர்களுக்கு, அதனை அகற்றக்கோரி வருவாய்த்துறையினர் நோட்டீசு வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பெண்கள் தர்ணா
இந்தநிலையில் நேற்று குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், வெப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், வருவாய் ஆய்வாளர் கார்த்திகா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சின்னார்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிசைகள், பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
இதற்கு பெண்கள் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
24 பேர் கைது
இதையடுத்து போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 22 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story