பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
பணி நீட்டிப்பு செய்து 4 மாத ஊதியத்தை வழங்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கரூர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காதொலிக்கருவி, ஊன்றுகோல் மற்றும் செல்போன் போன்ற உபகரணங்கள் கேட்டு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஆண்களுக்கான கருத்தடை திட்டம் தங்கத்தந்தை என்ற பெயரில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றது. தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில்தான் தங்கத்தந்தை திட்டத்தின் மூலம் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் அவர்கள் விரும்பும் அரசு நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
பரிசு
அதனடிப்படையில், இத்திட்டத்தின் மூலம் கருத்தடைசெய்து கொண்ட தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கு, அவரது மனைவி தையல் கடை வைப்பதற்கு ரூ.5 லட்சத்திற்கான வங்கி நிதி உதவி பெறுவதற்கான ஆணையினையும், தென்னிலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார். கரூர் மாவட்டத்தில் தங்கத்தந்தை திட்டத்தின் மூலம் இதுவரை 86 ஆண்கள் கருத்தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த தாயுடன், யாழினி என்ற அவரது 6 வயதுள்ள குழந்தையும் வந்திருந்தார். அவரிடம் ஒலிபெருக்கியில் திருக்குறள் சொல்ல முடியுமா என கேட்டார். தயக்கமின்றி அந்த குழந்தை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட திருக்குறள்களை ஒலிபெருக்கியில் தெரிவித்தார். அவரின் தன்னம்பிக்கையினையும், திருக்குறள் மேல் உள்ள ஆர்வத்தையும் பாராட்டி குழந்தைக்கு பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
4 மாத ஊதியம்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பன்னோக்கு பணியாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் கொரோனா வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், பன்னோக்கு பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை நேரடியாகவும், வெளிமுகமை அடிப்படையிலும் தமிழக அரசு நியமனம் செய்தது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்பணியாளர்கள் இல்லாத நிலையில், தற்போது பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாக உள்ள நாங்கள் அதை ஈடுகட்டும் வகையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு பணி நீட்டிப்பு தொடர்ந்து செய்யப்பட்டு வந்தும்கூட திடீரென 1.4.2022-லிருந்து பணி நீட்டிப்பு வழங்க மறுக்கப்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதால் மிகவும் மனஉளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளதோடு எதிர்கால வாழ்க்கை நிலைமை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் கடந்த 4 மாத ஊதியமும் எங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2020-ல் நியமிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட நாங்கள் தொடர்ந்து பணிபுரிய பணி நீட்டிப்பு செய்யவும், எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2021 டிசம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான மேற்கூரை
கா.பி.தாழைப்பட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கா.பி.தாழைப்பட்டி தொடக்கப்பள்ளி கட்டிடம் மேற்கூரை பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும். பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். கழிப்பறை கட்டிடம் பழுதடைந்துள்ளதால் அவற்றை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story