உற்பத்தி செய்த காய்கறி, பழங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


உற்பத்தி செய்த காய்கறி, பழங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 12:49 AM IST (Updated: 5 April 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி செய்த காய்கறி, பழங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஏப்.5-
தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமை தாங்கினார். விவசாய சங்க மகளிர் அமைப்பு நிர்வாகி விமலா, தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ராஜா, தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த வக்கீல் கென்னடி, ஜனநாயக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி லதா உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் காய்கறிகள், நெல், பயிறு வகைகள், தானியங்கள், பழங்கள், பூச்செடிகள், பீர்க்கன்காய், சுரக்காய், வாழைப்பூ உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும். திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், குடமுருட்டி, அரியாறு, கோறையாற்றின் வெள்ள பாதிப்பில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை காப்பாற்ற, நிரந்தர வெள்ள பாதுகாப்பு திட்டங்களை உருவாக்கி தடுப்பணைகள் கட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை அரசு பின்புலத்துடன் கொள்ளையடிக்கும் தரிசு நிலங்களை மீட்டு பொதுபயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் தொடர்ந்து கடனாளிகளாகவே உள்ளனர். எனவே, அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story