மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் பூக்குழி திருவிழா
சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.
பங்குனி திருவிழா
சாத்தூரில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் சிங்க வாகனம், மயில் வாகனம், பூப்பல்லாக்கு உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். அதேபோல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பூக்குழி இறங்கினர்
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காளியம்மன் கோவில் முன்பு பூக்குழி இறங்கினர். இதில் 430 பேர் பூக்குழி இறங்கினர்.
இந்த விழாவில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று வைப்பாற்றில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story