போக்குவரத்து நெரிசலான பகுதியில் பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
போக்குவரத்து நெரிசலான பகுதியில் பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்;
போக்குவரத்து நெரிசலான பகுதியில் பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
4 வழிச்சாலை
தஞ்சை மாநகரின் முக்கிய சாலையாக நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளது. இந்த சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையின் வழியாக சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மருத்துவக்கல்லூரிசாலை, வல்லம் நம்பர்-1 சாலை, புதுக்கோட்டை சாலை ஆகிய சாலைகளை போல் நாஞ்சிக்கோட்டை சாலையையும் 4 வழிச்சாலைகளாக மாற்றப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் நாஞ்சிக்கோட்டை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 வழிச்சாலைக்காக தற்போது சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், வீடுகள், ஓட்டல்களின் முன்பகுதி கட்டிடங்கள் பொக்லின் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்றுகாலை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது
மாநகரின் மிக முக்கிய சாலையான நாஞ்சிக்கோட்டை சாலை தற்போது 2 வழிச்சாலையாக உள்ளது. தமிழகஅரசின் உத்தரவின்பேரில் 2 வழிச்சாலையாக இருந்த நாஞ்சிக்கோட்டை சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கப்பட்டு வருகிறது. 2½ கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை 4 வழிச்சாலையாக மாறும்போது போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பணி 2 மாதங்களில் முடிக்கப்படும். எங்கெல்லாம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருக்கிறதோ, எந்த பகுதியில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறதோ அங்கு பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் மேகலா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story