சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயம்
x
தினத்தந்தி 5 April 2022 1:37 AM IST (Updated: 5 April 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

மணிகண்டம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்

மணிகண்டம், ஏப்.5-
மணிகண்டம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த  காளைகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்
ஜல்லிக்கட்டு
மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு  நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விராலிமலை, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட  719 காளைகள் பங்கேற்றன.
அதேபோல மாடுபிடி வீரர்கள் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காலை 7.45 மணியளவில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம்கருப்பையா ஆகியோர் கொடியசைத்து  தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் வீரர்களை தூக்கி வீசியும், காலால் மிதித்தும், கொம்பால் குத்திம் சீறிப்பாய்ந்து சென்றன.
34 பேர் காயம்
இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
 இதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் பிராட்டியூர் கங்காதரன் (வயது 23), மாட்டின் உரிமையாளர் விராலிமலை ஒன்றியம் விளாப்பட்டி ராஜா (31), பார்வையாளர்கள் ஆவூர் அருகே உள்ள களிமங்கலம் மதி (32), சாத்தனூர் பிரபு (34) ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story