பிளாஸ்டிக்-பேப்பர் கப் தயாரித்த 5 தொழிற்சாலைக்கு சீல் வைப்பு


பிளாஸ்டிக்-பேப்பர் கப் தயாரித்த 5 தொழிற்சாலைக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 5 April 2022 2:11 AM IST (Updated: 5 April 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப் தயாரித்த 5 தொழிற்சாலைக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சீல்வைத்து உள்ளது.

மதுரை, ஏப்.5-
பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப் தயாரித்த 5 தொழிற்சாலைக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சீல்வைத்து உள்ளது.
விற்பனை
தமிழகத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், வினியோகம் செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடையை மீறி ஏராளமான கடைகளில் பிளாஸ்டிக் கவர், கப், தட்டு போன்ற பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை செய்பவர்கள் மீது அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி மதுரை மாநகரில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் சமீபகாலமாக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக நகரில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதேபோல் பிளாஸ்டிக் கப்-க்கு மாற்றாக பேப்பர் கப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அரசின் உத்தரவுப்படி, இந்த பேப்பர் கப்பும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சீல் வைப்பு
இந்தநிலையில் கப்பலூர் பகுதியில் உள்ள சில நிறுவனங்களில் பேப்பர் கப் தயாரிப்பதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு கப்பலூரில் ஆய்வு செய்தனர். அப்போது 4 தொழிற்சாலைகளில் பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் கப் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த தொழிற்சாலைகள் அனைத்திற்கும் சீல் வைக்கப்பட்டன. அதேபோல் ஆரப்பாளையத்தில் உள்ள பேப்பர் கப் தொழிற்சாலையும் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது.. மேலும் இந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.
பிளாஸ்டிக் கப் போல, பேப்பர் கப்பும் தடை செய்யப்பட்டுள்ளதால் அவற்றை உற்பத்தி செய்வது தவறாகும். எனவே இதுபோன்ற உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் கூறினார்.

Next Story