கோடைகாலத்தில் சீரான முறையில்குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீரை தடையின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
கோடை காலம் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 10 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
குடிநீர் வினியோகம்
மாவட்டத்தில் சுமார் 28.4 லட்சம் மக்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 179 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கூட்டு குடிநீர் திட்டங்களின் நீராதாரங்கள் அனைத்தும் காவிரி ஆற்றில் மேட்டூர் அணையின் கீழ்புறத்தில் அமைந்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் வரும் கோடை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் தங்கு தடையின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
அதே நேரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்புகள் மற்றும் மின் மோட்டார்களில் ஏற்படும் பழுதுகள் ஆகியவற்றை உடனுக்குடன் சரி செய்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக களப்பணியாளர்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் திட்ட பழுதுகளை சரிசெய்ய தக்க அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிநீரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செங்கோடன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவாசன் மற்றும் நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story