பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜா உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை


பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜா உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 5 April 2022 2:32 AM IST (Updated: 5 April 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகர் ஆர்.என்.நாயக் கொலை வழக்கில் நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜா உள்பட 8 பேருக்கு கோகாக் கோர்ட்டு ஆயுள் தண்டணை விதித்து அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டணையும், மற்ற 3 பேர் விடுதலையும் செய்யப்பட்டுள்ளனர்.

பெலகாவி:

ரூ.3 கோடி கேட்டு மிரட்டல்

  பெலகாவி அங்கோலாவை சேர்ந்தவர் ஆர்.என்.நாயக். தொழிலதிபரான இவர், பா.ஜனதா பிரமுகராகவும் இருந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நிழல் உலக தாதாவான பன்னஞ்ஜே ராஜா, தொழில் அதிபர் ஆர்.என்.நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதற்கு ஆர்.என். நாயக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில் 2013-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி ஆர்.என்.நாயக் வெளியே ெசன்றுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பியபோது கே.சி.சாலையில் வைத்து 4 பேர் காரை வழிமறித்தனர். ஆர்.என். நாயக் காரில் இருந்து கீழே இறங்கியதாக தெரிகிறது. அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஆர்.என்.நாயக்கை நோக்கி சுட்டனர். இதில் பதிலுக்கு ஆர்.என்.நாயக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கும்பலை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு துளைத்து ஆர்.என்.நாயக் மற்றும் எதிர் கும்பலில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவேக்குமார் என்பவர் இறந்தனர்.

12 பேர் கைது

  இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து பெலகாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆர்.என்.நாயக் கொலையில் நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் பன்னஞ்ஜே ராஜா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜெகதீஷ் பட்டீல், விஜயாபுராவை சேர்ந்த அம்பாஜி பட்டகோரா, ஜெகதீஷ் சந்திரராஜ், அங்கீத குமார், கார்கலாவை சேர்ந்த மஞ்சுநாத், அச்சங்கி மகேஷ், சுள்யாவை சேர்ந்த சந்தோஷ், கேரளாவை சேர்ந்த இ்மாயில், ரம்தீன் சலீம், மாந்தர்ஷன் சம்பதாரி, ஆனந்த் நாயக் ஆகிய 12 பேரை கைது செய்து ஹிண்டல்கா சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை பெலகாவி கோகாக் கோர்ட்டில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதி சி.எம்.ஜோஷி வழக்கை விசாரித்து வந்தார்.

8 பேருக்கு ஆயுள் தண்டனை

  மேலும் சமீபத்தில் இரு தரப்பின் வாதங்களை கேட்டு நீதிபதி, பன்னஞ்ஜே ராஜா உள்பட 8 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். ஆனால் அப்போது தண்டணை வழங்காமல் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.என்.நாயக் கொலை வழக்கில் நீதிபதி சி.எம்.ஜோஷி தண்டனை விவரங்களை நேற்று அறிவித்தார்.

  அதில் கொலையாளிகளான நிழல் உலக தாதா பன்னஞ்ஜே ராஜா உள்பட 8 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் கேரளாவை சேர்ந்த இ்மாயிலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரம்தீன் சலீம், மாந்தர்ஷன் சம்பதாரி, ஆனந்த் நாயக் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு உரிய ஆதாரம் இல்லையென்று அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பில் உத்தரவிட்டார்.

Next Story