குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 April 2022 2:58 AM IST (Updated: 5 April 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னம்:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராம ஊராட்சியை சேர்ந்த வேப்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் ஆழ்குழாய் கிணறுகளையும், வயல்வெளி கிணறுகளையும் தேடி அலைந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் திடீரென குன்னம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசாரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் அங்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகள் நேரில் வர வேண்டும் என்று கூறி தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து அங்கு விரைந்து வந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்றும், அது வரை டேங்கர் லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் வேப்பூர்-குன்னம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story