தனி வீடு கட்டி கொடுக்க வேண்டும்


தனி வீடு கட்டி கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2022 3:52 AM IST (Updated: 5 April 2022 3:52 AM IST)
t-max-icont-min-icon

தாழக்குடி பேரூராட்சியில் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை மாற்றும் போது, தனி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்:
தாழக்குடி பேரூராட்சியில் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களை மாற்றும் போது, தனி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட மக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக லூயி பிரெய்லி கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சி, அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் அரசன் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ரெயில் நின்று செல்ல வேண்டும்
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதி நெல்லை-குமரி எல்லையாக இருப்பதால் பலதரப்பட்ட வர்த்தகம், விவசாயம் வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் மக்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் பிழைப்புக்காக வட மாநில மக்கள் அதிகமாக தொழில் செய்யும் பகுதியாகவும் உள்ளது.
இப்படிப்பட்ட ஆரல்வாய்மொழியில் உள்ள ரெயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்னதாக 4 ரெயில்கள் நின்று சென்றன. அதன்பிறகு கொரோனாவை காரணம் காட்டி ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்பட்டு வந்த அத்தனை ரெயில்களும் நிற்காமல் சென்றது. தற்போது அனந்தபுரி ரெயில் மட்டும் 1 நிமிடம் நின்று செல்கிறது. மீதமுள்ள கோவை, குருவாயூர், புனலூர், மதுரை உள்பட எந்த ரெயிலும் ஆரல்வாய்மொழியில் நிறுத்தப்படுவது இல்லை.
இதனால் பொதுமக்களும், வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நின்று செல்ல தடை விதிக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், அங்குள்ள முன்பதிவு மையம் செயல்படவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனி வீடு
தாழக்குடி பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் சுயம்பு கேசன் தலைமையில் ரோகிணி, பழனிவேல் மற்றும் ஊர்மக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர். அதில் "தாழக்குடி பேரூராட்சி புலியக்குறிச்சி குளக்கரையில் சுமார் 150 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதில் 55 வீடுகளுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கும் பட்டா தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் தரவில்லை. இந்த நிலையில் தற்போது பட்டா இல்லாத வீடுகளை விரைவில் மாற்றம் செய்ய வேண்டுமென்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். வங்கி மூலம் கடன் பெற்று ஆடு, மாடு, கோழி வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்கள் வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி வீடு கட்டி தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் எங்கள் தொழிலுக்கு அது உகந்தது அல்ல. எனவே புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை மாற்றும் முன் குடியிருக்க தனி வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
பச்சை தமிழகம்
பச்சை தமிழகம் கட்சி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், "டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி வழங்கப்படவில்லை. எனவே மகப்பேறு நிதி உதவி கிடைக்காதவர்களுக்கு உடனே நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழியில் சட்டவிரோதமாக பனைமரங்களை சிலர் வெட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்மநாபபுரம் சட்டசபை தொகுதி செயலாளர் மேசியா அளித்த மனுவில், "தக்கலை தாலுகாவுக்கு உட்பட்ட பத்மநாபபுரத்தில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2012-ம் ஆண்டு ஓட்டுக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது தற்போது வரை அதே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது ஆனால் அந்த கட்டிடம் பழமையானது என்பதால் மோசமான நிலையில் உள்ளது. எனவே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Next Story