கோடை வெயிலுக்கு இடையே குமரியில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு இடையே பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோடை வெயிலுக்கு இடையே பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் மலையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பேச்சிப்பாறை பகுதியில் 45.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை, நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.
மக்கள் மகிழ்ச்சி
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கம்பளம் சாைல, கே.பி.ரோடு, கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, செம்மாங்குடி ரோடு மற்றும் கோர்ட்டு ரோடு உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தண்ணீர் சென்றது.
இதற்கிடையே மழையின் போது மின்னல் தாக்கியதில் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து இரவு முழுவதும் இதமான காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story