குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு


குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 5 April 2022 6:46 PM IST (Updated: 5 April 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

போளூர் மற்றும் பிருதூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் மற்றும் பிருதூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். 

வெளிநடப்பு

போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் தாசில்தார் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாஸ்கரன், வேளாண் துறை அதிகாரிகள் சதீஷ்குமார், ராமு, பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஜ்வான், பேரூராட்சி தலைவர் ராணிசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் உரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். உரம் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று கூறி, கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

வெளியே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விவசாயிகள் பார்த்தீபன், சண்முகம், பால முருகன், மூர்த்தி, பழனி உள்ளிட்ட 60 பேர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீரவு் கூட்டத்துக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி தலைமை வகித்தார். 

வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பாண்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வந்தவாசி வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடைபோட விவசாயிகளிடமிருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வசூலிக்கின்றனர். 

இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேட்டை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டம் நடந்த திருமண மண்டபம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

 திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சுரேஷ் வரவேற்றார். 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் எடை போடுவதற்கு ரூ.40 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதை கண்டித்து கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கலந்து கொண்டனர். 

அடிப்படை வசதிகள்

தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தோட்டக்கலைத்துறையில் விவசாயிகளுக்கு ஏணி வழங்க வேண்டும். மெய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மெய்யூர் உயர்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

 கண்ணப்பந்தல் கிராமத்தில் உள்ள பொது கிணறு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ஏரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். 

தனியார் கடைகளை போன்று கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா உரத்துடன் இணை பொருட்கள் வழங்குகின்றனர். யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பேசினர். 

முன்னதாக விவசாயி ஒருவர் மண்வெட்டியுடன் அதிகாரிகள் முன்வந்து நின்று, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய வகையில் பயிர் காப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


ஆரணி

ஆரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. தாசில்தார் க.பெருமாள் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் சார்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிந்துரை செய்யுங்கள். 

மேலும் யூரியா மற்றும் பயிர் காக்கும் உயிர்கொல்லி மருந்துகளும் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் விலையும் உயர்ந்துள்ளது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


Next Story