ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி சென்னையை சேர்ந்தவர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
ரெயில்வேயில் வேலை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தை அடுத்த தேவரப்பன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த நாச்சிமுத்து, சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஆல்பர்ட்பிராங்கிளின் (வயது 38) ஆகியோர் அறிமுகம் ஆகினர்.
அப்போது ரெயில்வே, மின்சார வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக 2 பேரும் கூறினர். அதை கேட்ட ராஜேந்திரன் தனது மகன், மருமகள் ஆகியோர் வேலை தேடி கொண்டிருப்பதாக கூறினார். உடனே ரெயில்வேயில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.24 லட்சம் தரவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
ரூ.10 லட்சம் மோசடி
அதை உண்மை என நம்பிய ராஜேந்திரன் ரூ.10 லட்சம் கொடுத்து உள்ளார். அதை பெற்றுக்கொண்ட 2 பேரும் ரெயில்வே வேலைக்கான நியமன உத்தரவு கடிதங்களை கொடுத்தனர். அதோடு மீதமுள்ள தொகையை கேட்டனர். அதில் சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் வேலைக்கான நியமன உத்தரவு கடிதங்களை ரெயில்வே அதிகாரிகளிடம் காண்பித்து விசாரித்தார். அப்போது அது போலியான நியமன உத்தரவு என்பது தெரியவந்தது.
இதனால் பணத்தை திரும்ப கேட்டபோது, அவர்கள் ரூ.10 லட்சத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விசாரித்து நாச்சிமுத்து, ஆல்பர்ட் பிராங்கிளின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் ஆல்பர்ட் பிராங்கிளினை போலீசார் கைது செய்தனர். மேலும் நாச்சிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story