ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
நீடாமங்கலம் :-
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா
இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
குருப்பெயர்ச்சி விழா
நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய தலமாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி குருபகவான் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி குருபகவானுக்கு இன்று (புதன்கிழமை) முதல்கட்ட லட்சார்ச்சனை விழா தொடங்குகிறது. வருகிற 10-ந் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை விழா நடைபெறும்.
பரிகாரம் செய்யலாம்
குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 2-வது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறும். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்துகொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிஹரன், செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story