சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2022 12:15 AM IST (Updated: 5 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

திருவாரூர்:-

சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இதை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூர் ரெயில் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 
கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தேவைகளை நிறைவேற்றிய இயக்கம்

அ.தி.மு.க. மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிய இயக்கம். அந்த வகையில் மக்களின் பிரச்சினைக்காக இன்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஒரு முறை கூட வீட்டு வரி உள்ளிட்ட சொத்து வரி உயர்த்தப்படவில்லை. 
ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்களிலேயே மக்கள் மீது வரிச்சுமையை தி.மு.க. ஏற்றி உள்ளது. மத்திய அரசு சொன்னதால்தான் வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக தி.மு.க. கூறுகிறது. 

திரும்பப்பெற வேண்டும்

மத்திய அரசு சொல்லுகின்ற அனைத்தையும் அப்படியே தி.மு.க. ஏற்று கொள்கிறதா? அரசியல் லாபத்துக்கு ஏற்ற வகையில் எதிர்த்து அரசியல் செய்கிறார்கள். மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதில் மட்டும் தி.மு.க. ஆதரவு தெரிவிப்பது ஏன்? 150 சதவீதம் அளவிற்கு சொத்து வரி உயர்வை ஏற்படுத்தி மக்களை பாதிப்படைய செய்துள்ளனர். இதுவரை ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் வாக்களித்த மக்களுக்கு வரி உயர்வை வழங்குகிறார்கள்.
இந்த வரி உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும். வீட்டு வாடகை அதிகரிக்கும். இதை எல்லாம் உணர்ந்து உடனடியாக சொத்து வரி உயர்வை தி.மு.க. திரும்பப்பெற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

நிர்வாகிகள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் வாசுகிராமன், கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், குணசேகரன், அன்பழகன், மணிகண்டன், செந்தில், பாஸ்கர், சேகர், நகர செயலாளர்கள் மூர்த்தி, குமார், சண்முகசுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக திருவாரூரில் கட்சியின் மாவட்ட அலுவலகம் அருகில் நீர் மோர் பந்தலை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 
1 More update

Next Story