வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு; காதல் ஜோடி தற்கொலை முயற்சி


வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு; காதல் ஜோடி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 5 April 2022 8:50 PM IST (Updated: 5 April 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

நவலகுந்து அருகே வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது

உப்பள்ளி: நவலகுந்து அருகே வேறு சாதி என்பதால் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.  

 காதல் 

தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் மல்லப்பா(வயது 28). இவரும், தடஹாலா கிராமத்தை சேர்ந்த முத்தப்பா நரகுந்து என்பவரின் மகள் சாவித்திரியும்(22) நவலகுந்து டவுனில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். 

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்து வருகின்றனர். இதையடுத்து காதல் விவகாரம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளனர். 
 
திருமணத்திற்கு எதிர்ப்பு

இதில் மல்லப்பா வேறு சாதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மல்லப்பாவுடனான காதலை கைவிடும்படி சாவித்திரியை கண்டித்துள்ளனர். 

இதனால் காதல் ஜோடி மனமுடைந்து இருந்து வந்துள்ளது. இதற்கிடையே அவர்கள், தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். 
 
விஷம் குடித்த காதல் ஜோடி

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு காதல் ஜோடி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு குளிர் பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் சில நிமிடங்களில் மல்லப்பாவும், சாவித்திரியும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சம்பவம் அறிந்த நவலகுந்து டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் வேறு சாதி என்பதால் காதல் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து நவலகுந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நவலகுந்துவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story