வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு


வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 5 April 2022 9:13 PM IST (Updated: 5 April 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே வீடுகளை அகற்ற 86 குடும்பத்தினர் எதிர்ப்பு தொிவித்தனா். அந்த இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.

விழுப்புரம், 

மேல்மலையனூர் தாலுகா செவலபுரை குளக்கரை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
எங்கள் பகுதியில் 11 ஏக்கர் பரப்பில் 86 குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பயன்படாத சிறிய குளம் உள்ளது. அதில் 11 ஏக்கர் பரப்பளவும் வருவாய்த்துறை கணக்கில் குளம் புறம்போக்கு என்று உள்ளது. அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி, சத்துணவு மைய கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மைய கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, திரவுபதியம்மன் கோவில், நாடக மேடை இவற்றை சுற்றித்தான் 86 வீடுகளும் உள்ளது. எங்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி அனைத்தும் ஊராட்சியால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் மேற்கண்ட 11 ஏக்கரில் உள்ள அனைத்து வீடுகளும் குளம் புறம்போக்கு என்று கூறி எங்களது வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு நிலமோ, வீடோ கிடையாது. எனவே பயன்படுத்தாத குளத்தை அதிகாரிகள் அளவீடு செய்து ஒதுக்கிவிட்டு குடியிருப்பு பகுதிகளை நிலம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.

Next Story