விருத்தாசலம் அருகே பிடாரி அம்மனுக்கு தாலியை நேர்த்திக்கடனாக கொடுத்த கிராமத்து பெண்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி


விருத்தாசலம் அருகே  பிடாரி அம்மனுக்கு தாலியை நேர்த்திக்கடனாக கொடுத்த கிராமத்து பெண்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 5 April 2022 9:37 PM IST (Updated: 5 April 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே நேர்த்திக்கடனாக பிடாரி அம்மனுக்கு தாலியை பெண்கள் காணிக்கையாக கொடுத்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்

விருத்தாசலம்

அம்மனுக்கு திருமண சீர்வரிசை 

விருத்தாசலம் ஒன்றியம் சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன், அருகே உள்ள காணாது கண்டான் கிராமத்தில் பிறந்து, சின்ன பண்டாரங்குப்பம் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே ஆண்டுதோறும், சின்ன பண்டாரங்குப்பத்தில் பிடாரி அம்மன் கோவில்  திருவிழாவில், 8-ம் நாள் திருவிழா அன்று தனது தாய்வீடான காணாதுகண்டான் கிராமத்தில் அம்மன் எழுந்தருளி, காட்சி தருவார். 
அப்போது, கிராமத்து மக்கள்,  திருமண சீராக சீர்வரிசை பொருட்களும், குழந்தை வரம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து, பெண்கள் தாங்கள் அணிந்துள்ள தாலியை கழட்டி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இவ்வாறு தாலியை காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள், அன்று முதல் மாங்கல்யம் அணியாமல் வெறும் மஞ்சள் கயிறு மட்டும் அணிவார்கள். இந்த திருவிழா அப்பகுதியில் வெகு விமரிசையாக நடைபெறும். 

விழா கொடியேற்றம்

அந்த வகையில்  கொரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த விழா, இந்த ஆண்டு மீண்டும் நடந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன்படி,  கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தும் திருவிழா நேற்று காணாது கண்டான் கிராமத்தில் நடந்தது. முன்னதாக சின்ன பண்டாரங்குப்பத்தில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. 

தாலியை வழங்கினர்

பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக சென்றார். அப்போது, வேண்டுதல்கள் நிறைவேற பெண்கள் தங்களது தாலியை பூஜை பொருட்களுடன் பிடாரி அம்மனுக்கு காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பலர் அம்மனுக்கு திருமண சீர் பொருட்கள் வழங்கினார்கள்.
விழாவில் இன்று, சின்ன பண்டாரங்குப்பத்தில் உள்ள பிடாரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது, திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மஞ்சள் கயிறு அணிவோம்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கூறுகையில், திருமணத்தின் போது எல்லோருக்கும் கட்டுவது போல், எங்களுக்கும் தாலி கயிறுடன் தாலியும் சேர்த்து தான் கட்டுவார்கள். அவ்வாறு கட்டப்படும் தாலி ஒரு ஆண்டு தான் எங்கள் கழுத்தில் இருக்கும். 
அந்த இடைப்பட்ட காலத்தில் குழந்தை பிறக்க வேண்டும். குடும்பம் தழைக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக் கொண்டு எங்களது தாலியை கழட்டி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி விடுவோம். கணவன் கட்டிய தாலியை பிடாரியம்மனிடம் ஒப்படைத்து தாலியை நீ ஏற்றுக்கொண்டு, குழந்தை பாக்கியத்தையும், கணவன் பாக்கியத்தையும் ஆயுளுக்கும் கொடுத்துவிடு என்று வேண்டிக்கொண்டு மீண்டும் நாங்கள் ஆயுள் உள்ளவரை தாலியை அணிய மாட்டோம். வெறும் மஞ்சள் கயிறு மட்டும் அணிந்திருப்போம் என்றார். 

Next Story