46,858 லிட்டர் சமையல் எண்ணெய் பயோடீசலாக மாற்றம்
46858 லிட்டர் சமையல் எண்ணெய் பயோடீசலாக மாற்றம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்களில் பயன்படுத்திய 46 ஆயிரத்து 858 லிட்டர் சமையல் எண்ணெய் பயோடீசலாக மாற்றம் செய்ய அனுப்பி வைத்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமையல் எண்ணெய்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு குழு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பெற உணவு பாதுகாப்பு துறை முகவர்களை நியமித்துள்ளது. இந்த சமையல் எண்ணெயை மீண்டும், மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. இதை மீறும் உணவகங்கள் மற்றும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உணவகங்களில், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து அதை மறுசுழற்சி முறையில் பயோடீசலாக பயன்படுத்துமாறு உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பெற்று பயோடீசலாக மாற்றுவதற்கு ருகோ (RUCO) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முகவர்கள் உள்ளனர்.
46,858 லிட்டர் எண்ணெய்
உயர்தர, நடுத்தர உணவகங்கள், தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள், கோழி, மீன் இறைச்சி போன்றவற்றை பொரிக்கும் தள்ளுவண்டி கடைகள், துரித உணவகங்கள் ஆகியவற்றை கணக்கெடுத்து சமையல் எண்ணெய் பயன்பாடு, மீதமாகும் எண்ணெய் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முகவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்கங்கள், பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் மூலமாக இந்த திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 858 லிட்டர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரித்து பயோ டீசலாக தயார் செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு எண்ணெயை கொடுப்பதால் மக்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story