உடுமலை பகுதியில் இயற்கை முறையில் அதிக லாபம் தரக்கூடிய செடி அத்தி சாகுபடி


உடுமலை பகுதியில் இயற்கை முறையில் அதிக லாபம் தரக்கூடிய செடி அத்தி சாகுபடி
x
தினத்தந்தி 5 April 2022 10:40 PM IST (Updated: 5 April 2022 10:40 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் இயற்கை முறையில் அதிக லாபம் தரக்கூடிய செடி அத்தி சாகுபடி

போடிப்பட்டி:
உடுமலை பகுதியில் இயற்கை முறையில் அதிக லாபம் தரக்கூடிய செடி அத்தி சாகுபடி செய்துள்ள விளைநிலத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு இலைக்கு ஒரு காய்
உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி பகுதியில் இயற்கை முறையில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயி குரு ராஜமூர்த்தி தற்போது தென்னையில் ஊடுபயிராக செடி அத்தி பயிரிட்டுள்ளார். 
அந்த பண்ணையில் திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது செடி அத்தி சாகுபடி குறித்து விவசாயி குருராஜமூர்த்தி கூறியதாவது:- 
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம்.தற்போது தென்னையில் ஊடுபயிராக கொய்யா மற்றும் செடி அத்தி பயிரிட்டுள்ளோம். செடி அத்தியைப் பொறுத்தவரை நட்ட 3 மாதங்களில் காய்க்கத் துவங்குகிறது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செடி அத்தி சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. செடி அத்தியைப் பொறுத்தவரை ஒவ்வொரு இலை வரும்போதும் ஒரு அத்திக்காய் காய்க்கும். 
அத்திப் பழங்களைப் பறிக்கும் அளவுக்கு செடிகளைக் கவாத்து செய்தால் ஆண்டு முழுவதும் மகசூல் பெற முடியும்.ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 4 டன் வரை பழங்கள் பறிக்க முடியும்.இந்த செடி அத்தியை இயற்கை இடு பொருட்களான சாணம், கோமியம், ஜீவாமிர்தம், கடலைப் புண்ணாக்கு போன்றவற்றை மட்டுமே இட்டு வளர்ப்பதால் உற்பத்தி செலவு குறைவதுடன் சுவையும் அதிகரிக்கிறது.ஒரு கிலோ ரூ. 150 என்ற விலையில் தோட்டத்திலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். 
இது அதிக லாபம் தரக்கூடிய அத்தி சாகுபடியாக இருந்தாலும் இயற்கை முறையில் மேற்கொள்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது'என்று அவர் கூறினார்.
அங்ககச் சான்று
இதுகுறித்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:- 
எதிர்காலத்தில் மண்வளத்தைப் பாதுகாத்து வேளாண் விரிவாக்கம் செய்வதற்கும் உற்பத்தி அதிகரிப்பதற்கும் இயற்கை வேளாண்மை முறையே சிறந்த தீர்வாக இருக்கும்.இன்றைய வேளாண்மையில் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, உரப் பற்றாக்குறை, நதிகள் மாசு, பேரிடர்கள், மரபணு மாற்றுப் பயிர்கள், உற்பத்திக்கான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இவற்றுக்கும் இயற்கை வேளாண்மை மூலம் தீர்வு காண முடியும். 
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெற்று விற்பனை செய்வது கூடுதல் லாபம் பெற வழிவகுக்கும்.
இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா பானு உடனிருந்தார்.

Next Story