சொத்துவரி உயர்வை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர்,
சொத்துவரி உயர்வை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு என தமிழக மக்களையும், நூல் விலை உயர்வால் திருப்பூர் பனியன் தொழிலையும் வாட்டி வதைப்பதாக தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. இலங்கையில் குடும்ப ஆட்சியால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இன்னும் 6 மாதம் நீடித்தால் அதே நிலைமை தமிழகத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது தி.மு.க. அரசு 150 சதவீதம் சொத்துவரியை உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டு வாடகை உயரும் அபாயம் உள்ளது. கொரோனா காலத்துக்கு பிறகு தொழில் செய்து வாழ்க்கையை மீட்கலாம் என்று நினைத்த வேளையில் சொத்துவரி உயர்வு என்பது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. சொத்துவரி உயர்வு பாதிப்பு குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விளம்பர பதாகைகளை வைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்னும் ஒருவாரத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மக்களை திரட்டி அந்தந்த பகுதிகளில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story