கறம்பக்குடி பகுதியில் 10 ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வியாபாரிகள் அவதி வங்கிகள் மூலம் வினியோகம் செய்ய கோரிக்கை
கறம்பக்குடி பகுதியில் 10 ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வங்கிகள் மூலம் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கறம்பக்குடி:
வளர்ந்து வரும் வர்த்தக நகரம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க, விற்க தினமும் கறம்பக்குடி வந்து செல்கின்றனர். இதனால் நல்ல வியாபார ஸ்தலமாக கறம்பக்குடி உள்ளது.
10 ரூபாய் நோட்டு தட்டுப்பாடு
இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக 10 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரத்தில் தடங்கல் ஏற்பட்டு வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் யாரும் வாங்குவதில்லை. வங்கிகளும் வாங்க மறுக்கின்றன. எனவே வியாபாரிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் முடங்கி கிடக்கின்றன.
அதேவேளையில் 10 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லாததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதே போல் 5 ரூபாய் நாணயங்களும் அதிகம் புழக்கத்தில் இல்லை. இதனால் வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வீண் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வியாபாரிகள் கோரிக்கை
இந்த சில்லறை தட்டுப்பாட்டால் தேவையற்ற பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி கறம்பக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 10 ரூபாய் நோட்டு மற்றும் 5 ரூபாய் நாணயங்களை வினியோகம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story