மண் சரிவு ஏற்பட்டு 6 மாதங்களாகியும் கண்டு கொள்ளாத அதிகாரிகள்


மண் சரிவு ஏற்பட்டு 6 மாதங்களாகியும் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 5 April 2022 11:08 PM IST (Updated: 5 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் மண் சரிவு ஏற்பட்டு 6 மாதங்களாகியும் அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மலைவாழ்மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி கிராமத்தில் இருந்து சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் மலை அடிவாரம் வரை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக மேல்பாச்சேரி, தாழ்பாச்சேரி விளாம்பட்டி, சின்னதிருப்பதி, கிணத்தூர், சேத்தூர் என 10-க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் சிறுவாச்சூர்  வழியாக தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.  இங்கிருந்து   கச்சிராயப்பாளையம், வெள்ளிமலை ஆகிய பகுதிகள் சுமார் 45 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ளதால், மேல்பாச்சேரி பகுதி மலைவாழ் மக்கள் பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைவாசல், ஆத்தூர் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழையின் போது மேல்பாச்சேரியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் கற்கள் மற்றும் மண் குவிந்து கிடக்கிறது. இதனை இது வரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து பல முறை புகார் அளித்தும் சாலையில் குவிந்து கிடக்கும் மண் மற்றும் கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிள்றனர்.
  இதனால் அப்பகுதி மக்கள் தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story