ராணிப்பேட்டையில் தேசிங்கு ராஜா, ராணி நினைவு மண்டபத்தை புனரமைக்க வேண்டும்


ராணிப்பேட்டையில் தேசிங்கு ராஜா, ராணி நினைவு மண்டபத்தை புனரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2022 11:41 PM IST (Updated: 5 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை நகரில் உள்ள தேசிங்குராஜா, ராணி நினைவு மண்டபத்தை விரைவாக புனரமைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகரில் உள்ள தேசிங்குராஜா, ராணி நினைவு மண்டபத்தை விரைவாக புனரமைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, வங்கி கணக்கு தொடக்கம் போன்ற பணிகள் செய்திட அனைத்து தாசில்தார்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அபராதம் விதிப்பதை கடுமையாக்க வேண்டும்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை தொடர்ந்து மேற்கொண்டால் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் மனு அளிப்பது குறையும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கு நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். 

தேசிய அடையாள அட்டை

கிராம நிர்வாக அலுவலர்கள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க தாசில்தார்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராணிப்பேட்டை நகரில் உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி நினைவு மண்டபத்தை புனரமைக்கும் திட்டம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதை விரைவுப்படுத்த தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதுவரையில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story