நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வங்கி கணக்கில் ரூ.59 ஆயிரம் எடுத்து நூதன மோசடி
ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்த பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்த பணம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன்நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது54). திருவாடானை உட்கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரின் வங்கி கணக்கில் பான்கார்டு மற்றும் சுயவிவரங்கள் முழுமையடையாமல் உள்ளதால் கீழக்கண்ட இணைப்பினுள் சென்று பூர்த்தி செய்து வங்கி கணக்கினை தொடர்ந்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவின்படி உங்களின் வங்கி கணக்கு நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பவுல்ராஜ் வங்கியின் பெயரில் இருந்து வந்துள்ள குறுஞ்செய்தி என்பதால் உடனடியாக அந்த இணைப்பினை திறந்து அதனுள் சென்றுள்ளார். அதில் அவரின் பிறந்த தேதி, ரகசிய எண் உள்ளிட்டவைகளை கேட்க இவர் கொடுக்க கொடுக்க அடுத்தடுத்து 3 தவணைகளில் ரூ.59 ஆயிரத்து 185 பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
புகார்
வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவுல்ராஜ் செய்வதறியாது திகைத்தார். உடனடியாக ராமநாதபுரம் வந்து சைபர்கிரைம் போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி 1930 எண்ற தேசிய சைபர்கிரைம் புகார் எண்ணில் தொடர்பு கொண்டு தனது பணம் எடுக்கப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் சைபர்கிரைம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பவுல்ராஜின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் ரூ.24 ஆயிரத்து 990-ஐ உடனடியாக தடுத்து மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் மீட்டனர். உடனடியாக அவர் 1930 எண்ணிற்கு அந்த நிமிடமே புகார் செய்திருந்தால் முழுபணமும் மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் தடுத்திருக்கலாம் என்றும் காலதாமதம் ஆனதால் பாதிப்பணம் மட்டுமே மீட்கப்பட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை
எனவே, இதுபோன்று மோசடி நபர்களின் பணமோசடியில் சிக்கி ஏமாந்தால் உடனடியாக 1930 எண்ணில் புகார் செய்தால் மோசடி நபர்கள் எத்தனை வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றாலும் தடுத்து மீட்க முடியும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். தன் பணம் எடுக்கப்பட்டு விட்டதே என்ற பதற்றத்தில் காலதாமதம் செய்துவிடக்கூடாது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் நடந்த இந்த மோசடி தொடர்பாக ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story