சொத்துவரி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி ஓசூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
சொத்துவரி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி, ஓசூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மத்திய அரசுடன் இணக்கமாக...
பின்னர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ரஷ்யா- உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. ஆனால் சொத்து வரியை தி.மு.க. அரசு உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவது அழகல்ல. கடந்த ஆட்சியில் எந்த சொத்து வரியும் உயர்த்தப்படவில்லை. மேலும் மத்திய அரசை அணுகி மாநில அரசுக்கு தேவைப்படும் நிதியை அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று தந்தார். மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல இந்த அரசு மறுக்கிறது. அதை விவசாயிகள் மீதும், பொதுமக்கள் மீதும் சொத்து வரி என்ற பெயரில் திணிக்கின்றனர் என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்சா ராஜன், பையூர் ரவி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து, நகர செயலாளர்கள் கேசவன், அண்ணாத்துரை, வாசுதேவன், நகராட்சி கவுன்சிலர்கள் காயத்திரி தங்கமுத்து, எழிலரசி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
இதில், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன், ஓசூர் மாநகர செயலாளர் எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் ஹரீஷ் ரெட்டி, ரவிகுமார் மற்றும் அ.தி.மு.க. மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story