ராமநாதபுரத்தில் 2-வது நாளாக மழை


ராமநாதபுரத்தில் 2-வது நாளாக மழை
x
தினத்தந்தி 5 April 2022 11:42 PM IST (Updated: 5 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 2-வது நாளாக மழை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரி வெயில் சமயத்திற்கு முன்னதாகவே கடந்த சில தினங்களாக கத்தரி வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பகல் முழுவதும் வெயில் வெளியில் செல்ல முடியாத வகையில் அடித்து வரும் நிலையில் மாலையில் கடற்கரை காற்று வீசுவதால் மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகள் காரணமாக வேறுவழியின்றி வெயிலை பொறுத்துக்கொண்டு வெளியில் சென்று வருகின்றனர். அந்தளவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அனல் காற்றுடன் வீசியது. இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர். தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வழக்கத்தை விட அதிகமாக வெயில் வாட்டி வதைத்தது. இதனை தொடர்ந்து திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்கி சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தில் சிக்கியிருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினமும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story