பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு


பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 5 April 2022 11:42 PM IST (Updated: 5 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இளையான்குடி, 
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி திருவிழா
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்த விழா கடந்த மாதம் 29-ந்தேதி இரவு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம் மற்றும் பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அவர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு படையல் செய்து வழிபாடு செய்தனர். மேலும் அங்கேயே பலியிட்ட ஆடு, கோழி கறிகளை சமையல் செய்து மதிய விருந்து நடத்தினர். 
பொங்கல் வைத்தனர்
இதுதவிர இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த மக்களும் கோவில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிலர் தங்களது விளைந்த வயலில் வைத்து கோவில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று நேர்த்திக்கடனாக பலியிட்ட ஆட்டுக்கறியை கிராம மக்கள் கொடி கட்டி காய வைத்தனர். 
முன்னதாக பொங்கல் விழாவையொட்டி உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், விநாயகர் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன் பின்னர் கோவிலை சுற்றி அம்மன் மற்றும் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று தேரோட்டம்
நேற்று ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும், அங்க பிரதட்சணம், ஆயிரம் கண் பானை எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி இன்று இரவு 7.15 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பக்தர்கள் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழாவான வரும் 8-ந் தேதி காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு காளையார்கோவில், தாயமங்கலம் கோவிலுக்கு மதுரை, சிவகங்கை, காரைக்குடி, பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story