சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டம்
சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை
சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோவையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. அறிவித்த 524 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு உள்ளது. தற்போது, சொத்து வரி 50, 100 மற்றும் 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில் தான் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாக கூறுகிறார்கள்.
தொடர்ந்து போராட்டம்
மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த கூறவில்லை. வருவாயை உயர்த்த 10-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதலை கூறி உள்ளது. இதே வழிகாட்டுதல் கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போதும் வந்தது. ஆனால் வரி உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால், சொத்து வரியை ஒரு ரூபாய் கூட உயர்த்த கூடாது என்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.ஆனால் தற்போது சொத்து வரியை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தை நடத்துவோம்.
திட்டங்கள் ரத்து
ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து உள்ளனர். இது பெண்களுக்கு இழைக்கும் துரோகம். இதேபோல அம்மா மினி கிளினிக் திட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளலூர் பேரூராட்சி சம்பவத்தில் காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வினரை கைது செய்தனர். காவல்துறையினர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். விருதுநகர் சம்பவம் பற்றி இதுவரை கனிமொழி, கம்யூனிஸ்டு கட்சிகள் யாரும் பேசவில்லை.
சொத்து வரி உயர்வை ரத்து செய்து, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story