சேமங்கி மாரியம்மன் கோவிலில் பூச்சூடுதல் விழா
சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூச்சூடுதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நொய்யல்
திருவிழா
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கியில் பிரசித்தி பெற்ற பதினெட்டு பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை பூச்சாட்டுதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பக்தர்கள் தரிசனம்
அதனைத் தொடர்ந்து இரவு மாரியம்மன் மற்றும் செல்லாண்டியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் நொய்யல் சுற்று வட்டார பகுதி 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூச்சூடுதல் விழா நடைபெற்றது.
Related Tags :
Next Story