கும்பல் தலைவனுக்கு தனிப்படை வலைவீச்சு: ‘‘கஞ்சாவை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கி ரூ.2 லட்சத்திற்கு விற்பனை’’ கைதான போலீஸ்காரர் பரபரப்பு தகவல்
கஞ்சாவை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கி ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக கைதான கோவை போலீஸ்காரர் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை:
போலீஸ்காரர் கைது
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அறந்தாங்கியில் கைதானவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் கணேஷ்குமாரை நேற்று முன்தினம் தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தினர் கூறியதாவது:- கைதான கணேஷ்குமார் கோவையில் பணியாற்றிய காலத்தில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக துறைரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவர் பணிக்கு வந்த பின் கஞ்சா விற்பனையில் தற்போது சிக்கியுள்ளார்.
ரூ.2 லட்சத்திற்கு...
கஞ்சாவை தேனியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து கோவை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்துவந்துள்ளது. 2 கிலோ கஞ்சாவை ரூ.25 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதனை பொட்டலமாக மாற்றி ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள கஞ்சா விற்பனை கும்பல் தலைவனை பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர் சிக்குவார். போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவால் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story