ரூ.11½ லட்சம் வரி செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு-திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
3 ஆண்டுகளாக சொத்து, குடிநீர் வரியாக ரூ.11½ லட்சம் செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு சீல் வைத்து திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
எலச்சிபாளையம்:
ரூ.11½ லட்சம் வரி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து, குடிநீர் வரி செலுத்த வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் திருச்செங்கோட்டில் ஈரோடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் சொத்து வரி கடந்த 3 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை. இதனால் 3 ஆண்டு வரி பாக்கியான 11 லட்சத்து 54 ஆயிரத்து 892 ரூபாயை செலுத்தும் படி பி.எஸ்.என்.எல். நிர்வாகத்துக்கு கடந்த மாதம் நோட்டீசு வழங்கி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சொத்து மற்றும் குடிநீர் வரியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு ‘சீல்’
இதனிடையே நேற்று முன்தினம் திருச்செங்கோடு நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி, பி.எஸ்.என்.எல். உதவி செயற்பொறியாளர் பொன்ராஜிடம் வரிபாக்கியை செலுத்தாவிட்டால் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் நேற்று காலை வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு சென்றனர்.
அவர்கள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.
பரபரப்பு
மேலும் அலுவலக வளாகத்தில் உள்ள 2 கேட்டுகளையும் பூட்ட முயன்றனர். அப்போது பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், இந்த வளாகத்தில் பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. எனவே கேட்டுகளை பூட்ட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் வளாகத்தின் ஒரு பக்க கேட்டை மட்டும் பூட்டினர். சொத்து, குடிநீர் வரியாக ரூ.11½ லட்சம் செலுத்தாததால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story