சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை-தங்கமணி பேட்டி


சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை-தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 6 April 2022 12:17 AM IST (Updated: 6 April 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை என்று தங்கமணி கூறினார்.

நாமக்கல்:
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து நேற்று நாமக்கல்லில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தான் அ.தி.மு.க. ஆட்சி செய்யும் போது வரிகளை உயர்த்தாமல் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினோம். ஆனால் 10 மாத காலத்தில் தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை. சொத்து வரியை உயர்த்தியதே இந்த ஆட்சியின் சாதனை. மத்திய அரசை குறை சொல்லி தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். இனி வரும் காலங்களில் மத்திய அரசை காரணம் காட்டி மின்சார கட்டணத்தையும் உயர்த்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சசிகலாவை மறைமுகமாக சந்தித்ததாக தகவல் வருகிறதே என கேள்வி எழுப்பினர். அதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்லி விட்டார். சசிகலாவிற்கு கட்சியில் இடமில்லை என்று அவர் கூறிவிட்டார். அவருடைய கருத்துக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.

Next Story