வணிகர் விடியல் மாநாட்டுக்கான கால்கோள் விழா


வணிகர் விடியல் மாநாட்டுக்கான கால்கோள் விழா
x
தினத்தந்தி 6 April 2022 12:35 AM IST (Updated: 6 April 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மே 5-ந் தேதி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வணிகர் விடியல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது.

திருச்சி, ஏப்.6-
திருச்சியில் மே 5-ந் தேதி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வணிகர் விடியல் மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது.
கால்கோள் விழா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டுச்சந்தை திடலில் 39-வது வணிகர் தின மாநில மாநாடு, தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாடு நடைபெறுவதையொட்டி நேற்று மாநாட்டுக்கான பந்தல் கால்கோள் விழா பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, மாநில துணைத்தலைவர் எஸ்.கந்தன், திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி. ஸ்ரீதர் மற்றும்  திருச்சி மாவட்ட நகை அடகுபிடிப்போர் சங்க பொதுச்செயலாளர் வி.காசிவிஸ்வநாதன், மாவட்ட செயலாளர் எஸ்.வி.அன்பழகன், மாநகர செயலாளர் ஜி.செந்தில், பொருளாளர் என்.எஸ்.பி.ரவிசங்கர், செய்திதொடர்பாளர் டி.செந்தில்நாதன் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து திரளான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-
அந்நிய நாட்டு வர்த்தகம் புறக்கணிப்பு
மே 5-ந் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் 5 லட்சம் வணிகர்களை திரட்டக்கூடிய திருப்புமுனை மாநாடாக அமையும். மாநாடு 50 ஏக்கர் பரப்பளவில் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் வியாபாரிகளுக்கு இருக்கிற பல்வேறு இடர்பாடுகளை அகற்றுவதற்கான மாநாடாக இது அமையும். 38 ஆண்டுகளாக மாநாடு நடத்தினாலும் முதல் முறையாக மாநாட்டு மேடையேறி மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்த இருக்கிறோம். எனவே, இது வெற்றி மாநாடாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழகம் முழுவதும் மாநாடு நடக்கும் அன்று வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு, வணிகர்கள் முழுமையாக பங்கேற்கவும் முடிவெடுத்துள்ளோம்.
ஆன்லைன் வர்த்தகத்தை, குறிப்பாக அந்நிய நாட்டு கம்பெனிகளை நாங்கள் தொடர்ந்து புறக்கணித்து கொண்டே, எதிர்த்து போராடியும் வருகிறோம். உள்நாட்டு சாமானிய வணிகர்களை ஆன்லைன் மூலமாக தொழில் செய்வதற்கு பேரமைப்பால் ஐ.டி.லிங்க் தனியாக அமைக்கப்பட்டு ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
வணிகர்கள் அச்சம்
அதேபோன்று துபாய் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் லூலூ குழுமம் மார்க்கெட் வர கையெழுத்திட்டு இருக்கிறார். இதனால், பல்வேறு வியாபாரிகளுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, முதல்-அமைச்சரை வணிகர்கள் நேரில் சென்று, வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாத சூழலை உருவாக்க வேண்டும் என அழுத்தம் தர இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story