உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது


உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 6 April 2022 1:28 AM IST (Updated: 6 April 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை, 

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் பிரம்மோற்சவ விழாதான் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவாகும். இது உலகப்புகழ் பெற்றதாகும்.
12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில்தான் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், சுந்தரேசுவரரை எதிர்த்து மீனாட்சி அம்மன் போரிடும் திக்கு விஜயம், மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் என முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொேரானா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம் போல் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே நேற்று கொடியேற்றத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல்

சுவாமி சன்னதி முன்பு கம்பத்தடி மண்டபத்தில் 62 அடி உயர தங்க கொடிமரம் அமைந்துள்ளது. கொடியேற்றத்தையொட்டி அந்த பகுதி முழுவதும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சித்திரை திருவிழாவுக்காக விக்ரம் என்ற சிதம்பரம் பட்டர் காப்பு கட்டியிருந்தார்.  கொடிமரத்தின் முன்பு மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், விநாயகர், முருகன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள்.
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க காலை 10.50 மணிக்கு மிதுன லக்கனத்தில் ரிஷபம், கும்பம், சுவாமி படம் வரைந்த கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, மகாதீபாராதனை நடந்தது.
கோவில் ஓதுவார்கள் தேவார, திருமந்திரங்கள் மற்றும் கொடி பாடல்களை பாடினார்கள். கொடியேற்றத்தின் போது மேலே இருந்து பூக்கள் தூவப்பட்டன. பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மன், 2-ம் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து கோவிலுக்குள் குலாலர் மண்டகப்படியில் எழுந்தருளினர்.

மாசி வீதிகளில் வலம் வந்தனர்

சித்திரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுவாமியும், அம்மனும் நான்கு மாசி வீதிகளில் காலை, இரவில் வலம் வந்து காட்சி அளிப்பர்.
அதன்படி நேற்று இரவு 7 மணிக்குமேல் சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போதும் ஏராளமான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் வருகிற 12-ந் தேதியும், திக்குவிஜயம் 13-ந் தேதியும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 14-ந் தேதியும், தேரோட்டம் 15-ந் தேதியும், தீர்த்தவாரி 16-ந் தேதியும் நடைெபறுகின்றன. 
ெகாடியேற்ற விழாவில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story