ரூ.5 லட்சம் பறிப்பு சம்பவத்தில் அலட்சியம் காட்டிய ஏட்டு கைது


ரூ.5 லட்சம் பறிப்பு சம்பவத்தில்  அலட்சியம் காட்டிய ஏட்டு கைது
x
தினத்தந்தி 6 April 2022 1:32 AM IST (Updated: 6 April 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே அதிர்ஷ்ட வைரக்கல் தருவதாக ரூ.5 லட்சம் பறிப்பு சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஏட்டு கைது செய்யப்பட்டார். பணத்துடன் தப்பிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே அதிர்ஷ்ட வைரக்கல் தருவதாக ரூ.5 லட்சம் பறிப்பு சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட ஏட்டு கைது செய்யப்பட்டார். பணத்துடன் தப்பிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ரூ.5 லட்சம் மோசடி

 ராமநாதபுரம் மாவட்டம், வெளிபட்டினத்தை சேர்ந்த சண்முகம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த 2-ந்தேதி கொடுத்த புகாரில், தன்னிடம் குறைந்த விலையில் அதிர்ஷ்ட வைரக்கற்கள் வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக கூறி இருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் ஆகியோர் மேற்பார்வையில் குற்றப்பிரிவு தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார்  இந்த வழக்கு தொடர்பாக உசிலம்பட்டி போலீஸ் ஏட்டு உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-

அதிர்ஷ்ட வைரக்கல்

 ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த சண்முகத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரடிகுளத்தை சேர்ந்த சங்கிலிபாண்டிக்கும் (50) கடந்த சில தினங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சண்முகம், ஒரு கோவிலுக்கு அதிர்ஷ்ட வைரக்கல் நேர்த்திக்கடன் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.
இதைக்கேட்ட சங்கிலிப்பாண்டி இதுபோன்ற அதிர்ஷ்டக்கல் உசிலம்பட்டி பகுதியில் எனக்கு தெரிந்த நபரிடம் உள்ளது. எனவே தாங்கள் ரூ.5 லட்சத்துடன் வரும்படி கூறியுள்ளார். 
இதை நம்பி சண்முகம் ரூ.5 லட்சத்துடன் உசிலம்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள காராம்பட்டியை சேர்ந்த புதுராஜா (51), கார் டிரைவரான நக்களபட்டி சேர்ந்த சார்லஸ் (49) ஆகிய 2 பேரும் சங்கிலிபாண்டியுடன் சேர்ந்து சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை பெற்றுள்ளனர். அதிர்ஷ்ட வைரக்கல் பற்றி கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து உள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த சண்முகம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த உசிலம்பட்டி போலீஸ் ஏட்டு சிவனாண்டி(50), இது குறித்து விசாரணை செய்யாமலும், போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமலும் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறி இருக்கிறார். இவரது அலட்சியத்தால் புதுராஜா, சங்கிலிபாண்டி, சார்லஸ் ஆகிய 3 பேரும் சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஏட்டு உள்பட 3 பேர் கைது

இந்த வழக்கில் புதுராஜா, சார்லஸ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சம்பவத்தை அலட்சியமாக கையாண்ட உசிலம்பட்டி போலீஸ் ஏட்டு சிவனாண்டியும் கைது செய்யப்பட்டார். 
 இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் சங்கிலிபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story