படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 April 2022 1:48 AM IST (Updated: 6 April 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். 
பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை  பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து கடந்த மாதம் 31-ந் தேதி நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால்  உதவித்தொகை வழங்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகளை  பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. 
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  இந்த உதவித் தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும்  இருக்க வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம்  பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை  ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.  ஏற்கனவே, விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம்(மே) 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  இயங்கும் வேலைவாய்ப்பற்றோர்  உதவித்தொகை திட்டப் பிரிவில் அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்றுவரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்குட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி வரை  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.

Next Story