இறந்து போனதாக கூறப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு
சத்தி அருகே இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட நபர் யார்? என்பதை கண்டறிய உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தி அருகே இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட தொழிலாளி திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதைக்கப்பட்ட நபர் யார்? என்பதை கண்டறிய உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரும்பு வெட்டும் தொழிலாளி
சத்தி அருகே பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.
இவர் கரும்பு வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும் அவர் அந்தந்த பகுதியில் மாதக்கணக்கில் தங்கி இருந்து வேலை பார்ப்பார். பின்னர் கரும்பு வெட்டும் வேலை முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அவர் வந்துவிடுவது வழக்கம்.
வீடு திரும்பவில்லை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு மூர்த்தி சென்று உள்ளார். அப்போது அவர் எந்த ஊருக்கு செல்கிறேன் என குடும்பத்தினரிடம் கூறாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே நீண்ட நாட்கள் ஆகியும் வீட்டுக்கு மூர்த்தி திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய மகன்களான கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் மூர்த்தியை பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களால் மூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து மூர்த்தியை தேடி வந்தனர்.
உடல் அடக்கம்
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக கார்த்தி மற்றும் அவருடைய உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கார்த்தி மற்றும் அவருடைய உறவினர்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையம் பகுதிக்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தவரின் முகம் மூர்த்தியின் முகம் போன்ற தோற்றத்துடன் இருந்தது. இதனால் இறந்து கிடந்தவர் தனது தந்தை மூர்த்திதான் என கார்த்தி உறுதி செய்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை எடுத்துக்கொண்டு கார்த்தியும், அவருடைய உறவினர்களும் புஞ்சைதுறையம்பாளையத்துக்கு வந்தனர். பின்னர் உரிய முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
உயிருடன் வந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூர்த்தி உயிருடன் வீடு திரும்பினார். அவரை நேரில் கண்டதும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் மூர்த்தி உயிருடன் உள்ளதை அறிந்ததும் அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி உயிருடன் வந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மூர்த்தியை காண திரண்டு வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு கரும்பு வெட்டுவதற்காக மூர்த்தி சென்றதும், அங்கு வேலை முடிந்ததால் வீட்டுக்கு வந்ததும்,’ தெரியவந்தது.
இறந்தவர் யார்?
மூர்த்தி உயிருடன் வந்ததால் இறந்தவர் யார்? என்ற குழப்பம் போலீசாரிடையே ஏற்பட்டு உள்ளது. மேலும் இறந்து கிடந்தவரின் உடல் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் கிடந்து உள்ளது. எனவே இறந்தவர் யார்? என்பதை கண்டறிய, சத்தியமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்காக புஞ்சைதுறையம்பாளையத்தில் புதைக்கப்பட்ட அந்த நபரின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து நேற்று பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவர் நந்தகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றார்கள். பின்னர் கோபி தாசில்தார் தியாகராஜ், வருவாய் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் உடல் மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் கூறுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.
உடல் தோண்டி எடுக்கப்படும் தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதையொட்டி சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story