ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் தஞ்சைக்கு 40 கிலோ கஞ்சா கடத்தல்


ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் தஞ்சைக்கு 40 கிலோ கஞ்சா கடத்தல்
x
தினத்தந்தி 6 April 2022 1:54 AM IST (Updated: 6 April 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கணவன், மனைவி உள்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

தஞ்சாவூர்;
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் தஞ்சைக்கு கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கணவன், மனைவி உள்பட 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
கஞ்சா விற்பதாக புகார்
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தஞ்சை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமிடேவிட், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன் மற்றும் போலீசார் இளையராஜா, சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
40 கிலோ பிடிபட்டது
இந்நிலையில் தஞ்சைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (வயது22), அவருடைய சகோதரர் சின்னசாமி (20), பாஸ்கர் (55), அவருடைய மனைவி பேச்சியம்மாள் (53), தங்கமாயன், அய்யர்சாமி, ஒச்சம்மாள் என்பதும் அவர்கள் 40 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
7 பேர் கைது
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
பின்னர் சிலம்பரசன், சின்னசாமி, பாஸ்கர், பேச்சியம்மாள் ஆகியோரை தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாரிடமும் தங்கமாயன், அய்யர்சாமி, ஒச்சம்மாள் ஆகியோரை நாகை மாவட்ட போலீசாரிடமும் ஒப்படைத்தனர்.
தனிப்படை போலீசார் மற்றும் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க உறுதுணையாக இருந்த சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோருக்கு தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story