தாளவாடி பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
தாளவாடி பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
தாளவாடி பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சின்ன வெங்காயம் சாகுபடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதி நகர், கெட்டவாடி, தலமலை அருள்வாடி உள்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை சாகுபடிசெய்வது வழக்கம்.
தற்போது தாளவாடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
ரூ.80 ஆயிரம்
தற்போது சின்ன வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் சின்ன வெங்காயத்தை வாங்க வரும் வியாபாரிகள் கிலோ ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரை விலை கொடுக்கின்றனர். சின்ன வெங்காயத்துக்கு உண்டான உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘சின்ன வெங்காயம் 3 மாத பயிர் ஆகும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்காக விதை வெங்காயம் வாங்க, களை எடுத்தல் பணி, உரம், மருந்து வாங்க என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. அதுவும் ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.70 கொடுத்து வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் நடவு செய்து உள்ளோம்.
அறுவடை செய்த கூலிக்கு...
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ஒன்று ரூ.30 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது சின்ன வெங்காயம் கிலோ ஒன்று ரூ.5 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அறுவடை செய்த கூலிக்கு கூட சின்ன வெங்காயம் விலை போகவில்லை.
இதனால் வெங்காயத்தை அறுவடை செய்யாமலேயே அப்படியே விட்டுவிட்டோம். பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை,’ என்றனர்.
Related Tags :
Next Story