கியாஸ் சிலிண்டருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்
விலை உயர்வை கண்டித்து அந்தியூரில் பொதுமக்கள் கியாஸ் சிலிண்டருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை உயர்வை கண்டித்து அந்தியூரில் பொதுமக்கள் கியாஸ் சிலிண்டருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை உயர்வு
நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து விட்டது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்
இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய வேதனைகளையும், மனக்குமுறல்களையும், கண்டனங்களையும் தெரிவிக்கும் வகையில் கியாஸ் சிலிண்டருக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்து உள்ளது.
அந்த போஸ்டரில் கியாஸ் சிலிண்டர் மீது கண்ணீர் வடிப்பது போன்றும், அதன்கீழ் பல்வேறு விதமான பூக்கள் வைத்திருப்பது போன்றும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த போஸ்டரில் 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலையை குறிக்கும் வகையில் ரூ.240 எனவும், விலையேற்றம் என்பதை குறிக்கும் வகையில் ரூ.980 எனவும் அச்சடிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் இல்லத்தரசிகள் என வாசகமும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பரபரப்பு
இந்த ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
தற்போது கியாஸ் சிலிண்டருக்கு இல்லத்தரசிகள் பெயரில் அச்சடித்து ஒட்டிய ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டரால் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story