தூக்கு கயிறு அணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


தூக்கு கயிறு அணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 2:14 AM IST (Updated: 6 April 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூக்கு கயிறு அணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சங்கு ஊதி கோஷம் எழுப்பினர்.

திருவையாறு;
திருவையாறு அருகே புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூக்கு கயிறு அணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சங்கு ஊதி கோஷம் எழுப்பினர். 
புறவழிச்சாலை
தஞ்சை மாவட்டம் திருவையாறில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. 
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அரசூரில் இருந்தும், திருவையாறில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் கஸ்தூரிபாய் நகர் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தி சர்வே பணிகள் நடந்து வந்தது. 
தூக்கு கயிறு அணிந்து
இந்த நிலையில் விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழதிருப்பூந்துருத்தியை சேர்ந்த செங்குட்டுவன் தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கண்டியூர் கீழதிருப்பூந்துருத்தி சாலையில் கழுத்தில் தூக்கு கயிறு அணிந்தும் சங்கு ஊதியும்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள், புறவழிச்சாலை பணிக்கு விளை நிலத்தை கையகப்படுத்தக்ககூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
வாழ்வாதாரம் பாதிப்பு
இது குறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது
விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைத்தால் எங்களின்(விவசாயிகளின்) வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எங்கள் விவசாயம் பாதிக்கப்படும். நீர்நிலைகள் பாதிக்கப்படும். புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்கள் எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். புறவழிச்சாலைக்கு நிலம் எடுத்தால் அடுத்த கட்ட போராட்டம்  கடுமையாக இருக்கும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். திடீரென விவசாயிகள் நடத்திய இந்த நூதன போராட்டத்தால் கீழதிருப்பூந்துருத்தி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story