146 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்
புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயர முருகன் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஏப்.6-:-
மலேசிய நாட்டின் பத்துமலையில் முருகன் சிலையை தமிழகத்தை சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதியாரின் குழுவினர் வடிவமைத்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீதர் குடும்பத்தினரின் பொருட்செலவில், சேலம் மாவட்டம் புத்திர கவுண்டன்பாளையத்தில், ஸ்தபதி தியாகராஜன் குழுவினரை கொண்டு 146 அடி உயர பிரமாண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
முத்துமலை அடிவாரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட உயரமாக, 146 அடி உயரத்தில் இந்த முருகன் சிலையை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரமுள்ள விஸ்வரூப மூர்த்தியாக முருக பெருமானுக்கு வேல் வடிவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழா
சர்வசாதகம் நாயனார் திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் ஆறுபடை முருகன் கோவில் குருக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழாவை நடத்துகிறார்கள். கும்பாபிஷேகத்தில் திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம், பேரூர் ஆதீனம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் கவுமார மடாலயம, 4-வது பட்டம் குமரகுருபர சாமிகள், வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள், மலேசியா திருமுருகன் திருவாக்கு பீடம் பாலயோகி சாமிகள் ஆகிய மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை முத்துமலை முருகன் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீதர் செய்து வருகிறார்.
இது குறித்து கோவில் நிர்வாகி ஸ்ரீதர்கூறும் போது, முத்துமலை முருகன் ஏத்தாப்பூர் சிவன் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் ஆகிய 3 கோவில்களையும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வழிபாடு மற்றும் தரிசனம் செய்ய கட்டண அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என்றார்.
Related Tags :
Next Story