செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்
கொண்டலாம்பட்டி அருகே நிலப்பிரச்சினையால் செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொண்டலாம்பட்டி:-
கொண்டலாம்பட்டி அருகே நிலப்பிரச்சினையால் செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர்த்தேக்க தொட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் சக்தி கோவில் வட்டத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 65). இவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள கரடு புறம்போக்கு நிலத்தின் அருகே குடியிருந்து வருகிறார். அங்கு இவர் 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர் வசித்து வரும் இடத்தை ஒட்டி இவரது முன்னோர்கள் வைத்துள்ள பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த நிலத்தில் தற்போது பெரிய புத்தூர் ஊராட்சி மன்ற தீர்மானத்தின் பேரில் சகாதேவன் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தில் கீழ் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்பட சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலர்கள் சென்றுள்ளார்கள்.
அதற்கு சகாதேவன் தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்டக்கூடாது என்று அதிகாரிகளிடம் வாதிட்டார். அது புறம்போக்கு இடம் என்பதால் சகாதேவன் வார்த்தையை நிராகரித்து நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
செல்போன் கோபுரம்
இந்த நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இருந்த சுமார் 75 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட தொடங்கினார். உடனே அங்கிருந்த கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் தாலுகா அதிகாரிகளும் நீண்டநேரம் சகாதேவனிடம் இறங்கும்படி கேட்டு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் சகாதேவன் கீழே இறங்கவில்லை. இதைத்தொடர்ந்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு படையினர் வந்து அவரை இறங்கி வரும்படி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதிகாரிகளின் வலியுறுத்தலை ஏற்காத சகாதேவன் மீண்டும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தை தொடர்ந்தார்.
இதையடுத்து மறுபடியும் தீயணைப்பு துறையினர் அழைத்துவரப்பட்டார். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கீழே வலைகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் நீண்ட நேரத்துக்கு பிறகு இரவு 9 மணிக்கு சகாதேவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் பெரியபுத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story