திருவட்டார் பஸ் நிலையம் ரூ.3 கோடியில் விரிவாக்கம்


திருவட்டார் பஸ் நிலையம்  ரூ.3 கோடியில் விரிவாக்கம்
x
தினத்தந்தி 6 April 2022 2:26 AM IST (Updated: 6 April 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் பஸ் நிலையம் ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்:
திருவட்டார் பஸ் நிலையம் ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
திருவட்டார் பஸ் நிலையம் மிக பழமையானது. தற்போது இங்குள்ள கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திருவட்டார் பஸ் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவட்டார் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றும் வகையில் ரூ.3 கோடியில் பஸ் நிலைய கட்டிடத்தை நவீன முறையில் விரிவாக்கம் செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் 29 கடைகள், 8 தங்கும் அறைகளும் அமைக்கப்பட உள்ளன. எனவே நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வெகுவிரைவில் திருவட்டார் பஸ் நிலையம் நவீன முறையில் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ணை எந்திரங்கள்
அதைத் தொடர்ந்து தோட்டக்கலை துறையின் கீழ் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் மூலம் 3 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர்-1, மினி டிராக்டர்-2, கலப்பை-2, விசைதெளிப்பான்-2 என ரூ.15 லட்சத்து 52 ஆயிரத்து 599 மதிப்பிலான பண்ணை எந்திரங்களை மானியத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் முத்தலக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், மீனாட்சி சுந்தரத்துக்கு 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக பெலின் கோல்டு சுகிந்த் என்பவருக்கு ரூ.5 ஆயிரமும் காசோலை வழங்கப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்பு விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான தேனீ வளர்ப்பு உபகரணங்கள் 18 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக கன்னியாகுமரி சுற்றுசூழல் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சுற்றுச்சூழல் பூங்கா பற்றிய சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட சுற்றுலா அதிகாரி சீத்தாராமனிடம், அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
முன்னதாக திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த தீர்வுதளம் நிகழ்ச்சியில் 44 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், குமரன்குடி வழியாக திங்கள்நகர் செல்லும் பஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அதிகாரிகள்
ஆய்வின்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் ஜாண் பிரைட் (கண்ணனூர்), ராஜ் (காட்டாத்துறை), திருவட்டார் தாசில்தார் தினேஷ், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ், திருவட்டார் பேரூர் திமுக செயலாளர் ரமேஷ், திருவட்டார் செயல் அலுவலர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் முகமது சகீப், அருவிக்கரை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஏற்றக்கோடு ஊராட்சி தலைவர் ரூஸ், கண்ணனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், உதவி இயக்குனர் ஆறுமுகம் (திருவட்டார்), சரண்யா (குருந்தன்கோடு) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story