பெங்களூருவில் 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


பெங்களூருவில் 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 6 April 2022 2:50 AM IST (Updated: 6 April 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொள்ளை வழக்கில் 2 ரவுடிகளை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

வியாபாரியிடம் கொள்ளை

  பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வியாபாரி வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வியாபாரி வெளியே சென்று விட்டு காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

  அப்போது அவரது காரை வழிமறித்த மர்மநபர்கள் வியாபாரியை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருந்தனர். இதுகுறித்து வியாபாரி அளித்த புகாரின் பேரில் கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

சுட்டுப்பிடிப்பு

  இந்த நிலையில் வியாபாரியிடம் கொள்ளையடித்த 2 பேர் ஜக்கூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை அங்கு சென்ற கொத்தனூர் போலீசார் அங்கு பதுங்கியிருந்த 2 பேரை பிடித்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டர் உமேசை தாக்கி விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். இதனால் போலீசாரையும் அவர்கள் தாக்க முயன்றனர். இதையடுத்து தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ் துப்பாக்கியால் அவர்கள் 2 பேரையும் நோக்கி சுட்டார்.

  இதில் 2 பேரின் கால்களிலும் குண்டு பாய்ந்தது. இதில் சுருண்டு விழுந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் 2 பேரும் மங்களூருவைச் சேர்ந்த ரவுடிகள் ஆன ஆசிப், ஈசாக் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் கொத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story