மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்


மேலூரில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 6 April 2022 3:06 AM IST (Updated: 6 April 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலூர்,

மேலூரில் மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாட்டுவண்டி பந்தயம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம், மேலூர் நகர தி.மு.க. சார்பில் மாபெரும் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் மேலூரில் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் மேலூர்-சிவகங்கை ரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் இருந்து ஏராளமான பிரபல பந்தய மாடுகள் கலந்து கொண்டன. 
முதலில் பெரியமாட்டு வண்டி பிரிவு பந்தயம் நடைபெற்றது.இதில் பெரிய மாடு 22 ஜோடிகள் கலந்து கொண்டன. பெரியமாடு போக வர 9 மைல் தூரம், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 17 ஜோடிகள் கலந்து கொண்டன. போக வர 6 மைல் தூரம் ஆகும். 
அமைச்சர் தொடங்கி வைத்தார்
மாட்டுவண்டி போட்டிகளை மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
 பெரிய மாட்டு வண்டி பிரிவு போட்டியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 69 ரூபாயை மாநில காளைகள் வளர்ப்போர் சங்கத் தலைவர் அவனியாபுரம் மோகன் சாமிகுமாரின் மாட்டு வண்டி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை நொண்டி கோவில்பட்டி துரைப்பாண்டி தேவர் விஸ்வமித்ரா மாட்டு வண்டி ஒரு லட்சத்து 69 ரூபாயும் வென்றது. மூன்றாவது பரிசை அ.வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு மற்றும் நொண்டிகோவில்பட்டி ஆர்.கே. சந்திரன் ஆகியோரின் மாடுகள் 70 ஆயிரத்து 69 ரூபாயும் பெற்றனர். நான்காம் பரிசை சின்னமாங்குளம் அழகு மாட்டு வண்டி ரூ.20,069 வென்றது. 

பரிசுகள்

சிறிய மாட்டு வண்டி பிரிவு போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுத்தொகையும், பரிசு கோப்பைகளையும் அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த மாட்டுவண்டி போட்டியை முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், மார்க்கெட் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான நேரு பாண்டியன், மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மாவட்ட கவுன்சிலர் கொட்டாம்பட்டி ராஜராஜன், அட்டப்பட்டி குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி தலைவர் குமரன், நகர் பொருளாளர் ரவி, நகர்மன்ற துணைத்தலைவர் இளஞ்செழியன், மேலூர் முன்னாள் யூனியன் சேர்மன் செல்வராஜ், நகர் வக்கீல் வேலன், தற்காகுடி சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எழில் வேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story